திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல 3-வது நாளாக தடை.. 144 தடை உத்தரவு எதிரொலி... போலீசார் குவிப்பு!

 
திருப்பரங்குன்றம் போலீசார் குவிப்பு பாதுகாப்பு

தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இன்றும் 3-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மலைக்குச் செல்லும் பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்களை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தொடர்ந்து மூன்றாவது நாளாக மலை மீது ஏற பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்

மலைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆயுதமேந்திய காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மலை மீது செல்லத் தடை நீடித்தாலும், மலை அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு மட்டும் உரிய அடையாளச் சான்று  சரிபார்ப்புக்குப் பிறகு செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் கல்தூண்

பதற்றமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க உயர் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.