சாவியை விழுங்கிய இளைஞர்... 10 கிலோ வாழைப்பழங்களைச் சாப்பிட வைத்த போலீஸ்!

 
banana banana

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், போலீஸ் விசாரணைக்கு பயந்து லாக்கர் சாவியை விழுங்கிய வாலிபரை, 10 கிலோ வாழைப்பழங்களைச் சாப்பிட வைத்துச் சாவியை மீட்ட ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது கார்த்திக், 17 வயது சிறுமியைக் கடத்தியதாகப் புகார் எழுந்த நிலையில் போலீசார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில், தனது கையில் வைத்திருந்த சிறிய சாவியைத் திடீரென வாயில் போட்டு விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.

பதறிப்போன போலீசார் கார்த்திக்கை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், விழுங்கப்பட்ட சாவி தொண்டையில் சிக்காமல் வயிற்றில் இருப்பதை எக்ஸ்-ரே மூலம் கண்டறிந்தனர். அறுவை சிகிச்சை ஏதுமின்றி சாவியை வெளியே எடுக்க வேண்டுமானால், அவருக்கு அதிகளவில் வாழைப்பழங்களைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, போலீசார் கார்த்திக்கிற்கு சுமார் 10 கிலோ வாழைப்பழங்களை வலுக்கட்டாயமாகச் சாப்பிடக் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து வாழைப்பழங்களைச் சாப்பிட்ட கார்த்திக்கிற்கு இயற்கை உபாதை ஏற்பட்ட போது, வயிற்றில் இருந்த சாவி எவ்வித காயமுமின்றி வெளியே வந்தது. இதனால் போலீசாரும் மருத்துவர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பொதுவாக இதுபோன்ற இரும்புப் பொருட்களை விழுங்குபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவது வழக்கம் என்றாலும், வாழைப்பழ வைத்தியம் மூலம் சாவி மீட்கப்பட்டது அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. தற்போது கார்த்திக் நலமுடன் இருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.