தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்... வணிகர் சங்கப் பேரவை அறிவிப்பு
வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறவில்லை என்றால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கடந்த மாதம் 10-ந் தேதி முதல், வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வணிகர்கள், ஆண்டுக்கு ரூ.1½ கோடி வரை வியாபாரம் செய்யும் வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இந்த தீர்மானத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இதற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், வாடகை கட்டிடங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறவில்லை என்றால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் சவுந்திரராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "ஜி.எஸ்.டி.யால் வணிகர்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசும், மத்திய அரசும் கட்டிட வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வருகிற 3ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங். கொறடா அசன் மெளலான எம்எல்ஏ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் செய்யது உஸ்மான், மதிமுக ஆவடி அந்திரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதுபோல் நெல்லை சந்திப்பில் 10ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதன் பின்னரும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!