வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்குத் தடை - நாடாளுமன்றத்தில் அதிரடிச் சட்டம்!
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியைத் தடை செய்வதற்கான 'பயங்கரவாத எதிர்ப்பு (திருத்த) மசோதா 2026' அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அக்கட்சி மீதான தடை தற்போது அதிகாரப்பூர்வ சட்டமாகியுள்ளது.
புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின்படி, அவாமி லீக் கட்சிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன: அக்கட்சி இனி எந்தவொரு அரசியல் கூட்டங்களையோ, பேரணிகளையோ அல்லது பொது உரைகளையோ நடத்த முடியாது.
கட்சியின் பெயரிலோ அல்லது அதன் ஆதரவிலோ சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடுவது மற்றும் பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.

தேர்தல் ஆணையத்தில் அவாமி லீக் கட்சியின் பதிவு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இனிவரும் தேர்தல்களில் அக்கட்சி போட்டியிட முடியாது. 2026 பிப்ரவரி மாதத் தேர்தலிலும் இக்கட்சி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு அவாமி லீக் கட்சியே காரணம் என இடைக்கால அரசு குற்றம் சாட்டியது. 2025 மே மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் (Ordinance) மூலம் முதன்முதலில் இந்தத் தடை கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக நாடாளுமன்றம் மாற்றியுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் ஷபிகுர் ரகுமான் உள்ளிட்ட சிலர், மசோதாவை ஆய்வு செய்யப் போதிய நேரம் வழங்கப்படவில்லை என ஆட்சேபனை தெரிவித்தனர். இருப்பினும், உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது இந்த மசோதாவைத் தாக்கல் செய்து, "இனப்படுகொலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்பைத் தடுப்பதே இதன் நோக்கம்" என்று விளக்கமளித்தார்.
சுமார் 75 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட, வங்கதேச விடுதலைப் போரை முன்னின்று நடத்திய அவாமி லீக் கட்சி, தற்போது ஒரு பயங்கரவாத அமைப்பைப் போலத் தடை செய்யப்பட்டுள்ளது தெற்காசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
