சென்னையின் பேரிடர் மேலாண்மை, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு வங்காளதேச அதிகாரிகள் ஆய்வு!
பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் செயல்பாடுகள், வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை திட்டங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை முறைகள் குறித்து வங்காளதேச நாட்டின் உயர் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது. சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தலைமையில் ரிப்பன் கட்டிடக் கூட்டரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிதித் திட்டமிடல், சேவை வழங்கல், புவியியல் தகவல் அமைப்பு மையம் மற்றும் நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு ஆகிய சென்னை மாநகராட்சியின் நவீனக் கண்காணிப்பு முறைகள் குறித்து வங்காளதேச அதிகாரிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது. தொடர்ந்து, ரிப்பன் கட்டிட வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

பல்லவன் சாலையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் மின்சாரப் பேருந்துகளுக்கான மின்னேற்ற வசதிகள் மற்றும் பொது-தனியார் பங்களிப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தர மோகன் முன்னிலையில், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ள முன்னறிவிப்பு அமைப்புகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர். 'முழுமையான சாலைகள்' திட்டத்தின் கீழ் காதர் நவாஸ்கான் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நவீன நடைபாதை வளாகத்தையும் அக்குழு பார்வையிட்டது.

வங்காளதேச உள்ளாட்சி நிர்வாகத் துறை இணைச் செயலாளர் பரிமல் சர்க்கார், நகராட்சி மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் முகமது கலிலுர் ரஹ்மான், உலக வங்கியின் பணிக் குழுத் தலைவர் மான்ஷா சென் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன மேலாண்மை இயக்குநர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், துணை ஆணையாளர்கள் சித்ரா விஜயன், தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னையின் பேரிடர் மேலாண்மை கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மாதிரிகளை உலக வங்கியின் ஒருங்கிணைப்பில் வந்த சர்வதேசக் குழு ஆராய்ந்தது குறிப்பிடத்தக்கது.
