நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மீண்டும் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

 
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்காததைக் கண்டித்து, பொதுத்துறை வங்கிகள் வரும் 28-ம்தேதி முதல் மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.

வங்கிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து முழுமையான வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வேலைநிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயம்மாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், வங்கிகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வேலைப்பளு அதிகமாகியுள்ள நிலையிலும், அரசு வங்கி கிளைகளைக் குறைத்துவிட்டுத் தனியார் வங்கிகளுக்குக் கிளைகள் தொடங்க அனுமதி அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குச் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இந்த விவகாரம் தொடர்பாக வரும் 22-ம்தேதி தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அக்கூட்டத்திலும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்றால் திட்டமிட்டபடி 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், அதன் பின்னரும் தீர்வு காணப்படாவிட்டால் அக்டோபர் 26-ம்தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.