நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு... தொடர்ந்து 4 நாட்கள் சேவைகள் முடங்கும் அபாயம்!

 
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்திற்கு 2024 மார்ச் மாத இருதரப்புப் பேச்சில் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஒப்புதல் அளித்து, தினசரி வேலைநேரத்தை 40 நிமிடங்கள் அதிகரிக்க முடிவானது. ஆனால் மத்திய அரசு 2 ஆண்டுகளாக இந்த பரிந்துரையை அமல்படுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாகச் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

எஸ்பிஐ வங்கி விடுமுறை

உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தனியாகச் செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை வழங்க வகை செய்யும் மத்திய அரசின் புதிய திட்டம் பாகுபாடானது என்றும், இருதரப்பு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் எதிர்ப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது, ஓய்வூதிய முறையை மறுசீரமைப்பது போன்ற நிலுவைக் கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

9 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் உயரிய அமைப்பான ஐக்கிய வங்கிச் சங்கங்களின் கூட்டமைப்பு தனது அடுத்தகட்ட போராட்டத் திட்டங்களை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 11: ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தம். செப்டம்பர் 28 - 30: கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம். அக்டோபர் 26 முதல்: காலவரையற்ற வேலைநிறுத்தம். 

எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் நடைபெற்றால், அதைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் வங்கிகள் இயங்காது: செப்டம்பர் 11 (வெள்ளி): அகில இந்திய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம். செப்டம்பர் 12 (சனி): 2-வது சனிக்கிழமை வங்கி விடுமுறை. செப்டம்பர் 13 (ஞாயிறு): வாராந்திர வங்கி விடுமுறை. செப்டம்பர் 14 (திங்கள்): விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறை.

இதனால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிப் பணிகள் மற்றும் நேரடிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகளை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.