இனி வங்கிகள் 5 நாட்கள் தான் இயங்குமா? - மத்திய அரசு விளக்கம்!

 
வங்கி

பொதுத்துறை வங்கிகள் இனி திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே செயல்படும் என்றும், அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், அது உண்மையில்லை என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளையும் பொது விடுமுறையாக அறிவித்து மத்திய நிதி அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்ததாகக் கூறி ஒரு அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இந்த நிலையில், அந்த அறிவிப்பு போலியானது என பத்திரிகை தகவல் அலுவலகத்தின் Fact Check பிரிவு தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளித்து மத்திய நிதி அமைச்சகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

தற்போதைய நடைமுறையின்படி, வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ளன. 1-வது, 3-வது மற்றும் 5-வது சனிக்கிழமைகள் வங்கிகளின் வழக்கமான வேலை நாட்களாக உள்ளன. இந்த நடைமுறை தற்போது தொடர்கிறது.

கூட்டுறவு வங்கி

அதேநேரத்தில், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவித்து வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் வகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக இந்திய வங்கிகள் சங்கம் (IBA) சமீபத்தில் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. ஆனால் குழு அமைக்கப்பட்டிருப்பது, 5 நாள் வங்கி வேலை முறை உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இதற்கு அரசு அனுமதி மற்றும் தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் இன்னும் தேவைப்படுகின்றன.எனவே, “இனி அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை” என்ற தகவலை வாடிக்கையாளர்கள் தற்போது நம்ப வேண்டாம். வங்கி விடுமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுவது அவசியம்.