பாரதிராஜா மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்... “என் இனிய தமிழ் மக்களே” குரல் என்றும் நிலைத்திருக்கும்!
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை உலகினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
தென் தமிழகத்தின் கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்து, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கித் திருப்பியவர் பாரதிராஜா என்று எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். திரைப்படங்களைத் தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்த பெருமை அவரையே சேரும் என்றும் அவர் புகழ்ந்துள்ளார். மேலும், பாரதிராஜாவின் தனித்துவமான அடையாளமாக விளங்கிய “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது காந்தக் குரல் சினிமா உள்ளவரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரைப்படத் துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மறைந்த பெருங்கலைஞனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பாரதிராஜாவின் உடலுக்குத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
