"பார்ட்டிக்கு பேஸ்மெண்ட் வீக்!" - எம்.எம்.அப்துல்லா கிண்டல்!

 
அப்துல்லா அப்துல்லா

"சினிமாலதான் சண்டையெல்லாம்! ரியல் லைஃப்ல பார்ட்டிக்கு கொஞ்சம் பேஸ்மெண்ட் வீக்கு" என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, திமுக முன்னாள் எம்.பி.,  எம்.எம்.அப்துல்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை நோக்கித் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக நகர்ந்து வரும் வேளையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவெக-வின் அரசியல் நகர்வுகளைக் கூர்மையாகக் கவனித்து, விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தனது எக்ஸ் பதிவில், "விஜய் அவர் கட்சிக்கு வர வேண்டிய ராஜ்யசபா எம்.பி. பதவியைக் காங்கிரஸூக்குக் குடுத்து இருக்காரு. அவரு கட்சியில் இருந்து எம்.பி. ஆனா, நாடாளுமன்றத்துல பிஜேபி கொண்டு வர்ற மக்கள் விரோத மசோதாவை எல்லாம் நேரடியா கடுமையா எதிர்த்துப் பேசணும்.

விஜய் ராகுல்

காங்கிரஸ்கிட்ட தள்ளிவிட்டா அவங்க பார்த்துக்குவாங்க. எதுக்கு நம்ம நேரடியா பகைச்சிகிட்டு? சினிமால தான் சண்டையெல்லாம்! ரியல் லைஃப்ல பார்ட்டிக்கு கொஞ்சம் 'பேஸ்மெண்ட்' வீக்கு!" என்று பதிவிட்டுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை நேரடியாகப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே விஜய் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார் என்றும், திரையில் காட்டும் அதிரடியை அவர் நிஜ அரசியல் களத்தில் காட்டத் தயங்குகிறார் என்றும் அப்துல்லா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து திமுக எம்பி பதிவிட்டுள்ள இந்த ட்வீட், சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.