‘பேட்மேன்’ பட நடிகர் ஜான் நோலன் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!
உலகப்புகழ் பெற்ற 'பேட்மேன்' திரைப்பட வரிசைகளிலும், பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து முத்திரை பதித்த மூத்த பிரிட்டிஷ் நடிகர் ஜான் நோலன் தனது 87-வது வயதில் காலமானார். இவரது மறைவு ஹாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் நாடகத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜான் நோலன், நவீன சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களான கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ஜொனாதன் நோலன் ஆகியோரின் பெரியப்பா ஆவார். கிறிஸ்டோபர் நோலன் தனது படங்களில் ஜான் நோலனுக்கு முக்கியமான கதாபாத்திரங்களை வழங்கி கௌரவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் நோலனின் 'பேட்மேன் பிகின்ஸ்' (2005) மற்றும் 'தி டார்க் நைட் ரைசஸ்' (2012) ஆகிய படங்களில் வேய்ன் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வாரிய உறுப்பினர் டக்ளஸ் ஃப்ரெட்ரிக்ஸ் கதாபாத்திரத்தில் ஜான் நோலன் நடித்திருந்தார்.
'பர்சன் ஆஃப் இன்ட்ரஸ்ட்' என்ற புகழ்பெற்ற தொடரில் அவர் நடித்த ஜான் கிரீர் என்ற வில்லன் கதாபாத்திரம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தது.
தனது பெரியப்பாவின் மறைவு குறித்து உருக்கமாகப் பேசியுள்ள கிறிஸ்டோபர் நோலன், "நான் அறிந்த முதல் கலைஞர் அவர்தான். நடிப்பில் உண்மையைத் தேடுவது எப்படி என்பதையும், படைப்பாற்றலின் மகிழ்ச்சியையும் எனக்குக் கற்றுக்கொடுத்தவர் அவரே. அவரை நான் மிகவும் இழக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
1960-களில் தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய ஜான் நோலன், ஷேக்ஸ்பியர் நாடகங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். 'டன்கிர்க்' மற்றும் கடைசியாக 2024-ல் வெளியான 'டியூன்: ப்ராஃபிசி' போன்ற படைப்புகளிலும் இவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அவருக்குக் கிம் ஹார்ட்மேன் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஜான் நோலனின் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
