சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

 
பேட்மிண்டன் பேட்மிண்டன்

சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி நட்சத்திர ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை களமிறங்கி விளையாடியது. அவர்களை எதிர்த்து உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் கிம் வோன் ஹோ மற்றும் சியோ சேங் ஜே இணை மோதியது.

இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே இரு தரப்பு வீரர்களும் புள்ளிகளைப் பெறக் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஆட்டத்தில் கொரிய ஜோடி 13-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோதும், சாத்விக் மற்றும் சிராக் ஜோடி தங்களின் பொறுமையான ஆட்டத்தால் 21-19 என்ற கணக்கில் முதல் கேமினைக் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் தொடக்கத்தில் பின்தங்கியிருந்த இந்திய இணை, பின்னர் தொடர்ச்சியாக 6 புள்ளிகளைப் பெற்று 21-18 என்ற கணக்கில் நேர் செட்களில் அபார வெற்றி பெற்றது.

சுமார் 52 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், உலக சாம்பியன் ஜோடியை முதல் முறையாக வீழ்த்தி இந்திய இணை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் சாத்விக் மற்றும் சிராக் ஜோடி, அடுத்த அரையிறுதியில் வெற்றி பெறும் இணையுடன் சாம்பியன் பட்டத்திற்காக மோத உள்ளது. அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் விளையாடிய இந்தியாவின் துருவ் கபிலா மற்றும் தனிஷா கிராஸ்டோ இணை ஜப்பான் ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.