கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவை திடீர் நிறுத்தம் - பயணிகள், முதியவர்கள் கடும் அவதி!

 
கோவில்பட்டி ரயில் நிலையம்  பேட்டரி கார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இயக்கப்பட்டு வந்த பேட்டரி கார் சேவை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், ரயிலில் பயணிக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கோவில்பட்டி ரயில் நிலையம் வழியாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்குத் தினசரி ஏராளமான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

கோவில்பட்டி

இந்த நிலையத்தில் வந்து செல்லும் முதியவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் நடைமேடைகளை எளிதில் கடந்து செல்வதற்காக பேட்டரி கார் சேவை பயன்பாட்டில் இருந்தது.

கடந்த ஒரு மாத காலமாக எந்தவித முன்னறிவிப்பும் அல்லது காரணமும் இன்றி இந்த பேட்டரி கார் சேவை முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. சேவை நிறுத்தப்பட்டதால், முதியவர்களும் பயணிகளும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு மாறுவதற்கும், தங்களது கனமான உடமைகளைச் சுமந்து செல்வதற்கும் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இந்தச் சேவையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.