ரூ20 லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் எரிந்து நாசம்... லாரியில் திடீர் தீ விபத்தால் பெரும் சோகம்!

 
லாரி லாரி

சென்னை போரூரில் இருந்து மராட்டிய மாநிலம் புனே நகருக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான ராட்சத தொழிற்சாலை பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்ற 30 வயது இளைஞர் ஓட்டிச்சென்றுள்ளார். இந்த லாரி நேற்று காலை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென விபத்து நேரிட்டது.

லாரி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, அதன் பின்பகுதியில் இருந்து எதிர்பாராத விதமாகத் திடீரென கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுநர் தமிழரசன் உடனடியாக லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மிகவும் வேகமாக பரவியதால் லாரியின் பின்பகுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்து காரணமாகச் சென்னை முதல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.