சீமான் தொகுதியில் ரணகளம்... கள்ள ஓட்டைத் தட்டிக்கேட்ட நாதக நிர்வாகிக்குக் கொடூர அடி - அமமுகவினர் அராஜகம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நட்சத்திரத் தொகுதியான காரைக்குடியில், கள்ள ஓட்டு விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது.
காரைக்குடி தொகுதிக்குட்பட்ட களத்தூர் பகுதியில் இன்று மதியம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியின் ஆதரவாளர்கள் சிலர், அங்கு முறையற்ற வகையில் கள்ள ஓட்டு செலுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சண்முகம் மற்றும் அக்கட்சியினர் தடுத்து நிறுத்தித் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

தங்கள் செயலைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அமமுகவினர், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சண்முகம் மீது திடீரெனக் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் சண்முகத்திற்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சீமான் போட்டியிடும் தொகுதி என்பதால் ஏற்கனவே காரைக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும், வாக்குச்சாவடிக்கு அருகிலேயே இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் போலீசார், கூட்டத்தைக் கலைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
