வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு! செப்.23-ல் ஆந்திரா-ஒடிசா கரையை நெருங்கும்... கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று வருவதால், ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்கக்கடலின் கிழக்கு-மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நன்கு குறியிடப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த அமைப்பு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, செப்டம்பர் 23-ஆம் தேதி காலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கமாக தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திரப் பகுதிகளில் செப்டம்பர் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ஒடிசாவில் செப்டம்பர் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் சில பகுதிகளில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.மேலும், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். செப்டம்பர் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 75 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போதைய கணிப்பின்படி இந்த அமைப்பு புயலாக மாறும் என உறுதி செய்யப்படவில்லை. எனவே, அதன் நகர்வு மற்றும் தீவிரத்தை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
