வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாறுமா? 'அக்வான்' என பெயர் சூட்ட வாய்ப்பு!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் வானிலை மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (நவம்பர் 13) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவம்பர் 14) வலுப்பெற்று, நன்கு வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், வரும் நவம்பர் 15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வானிலை அமைப்பு தொடர்ந்து வலுப்பெற்று புயலாக மாறுமா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு புயலாக உருவானால் அதற்கு ஈரான் பரிந்துரைத்துள்ள 'அக்வான்' (Akvan) எனப் பெயரிடப்படும்.இருப்பினும், தற்போதைய நிலையில் புயல் உருவாவது உறுதி செய்யப்படவில்லை. அதன் நகர்வு மற்றும் வலிமையைப் பொறுத்தே அடுத்தகட்ட வானிலை நிலவரம் தெரியவரும்.
