வங்கக்கடலில் நவ.13-ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி… தமிழகத்தில் மீண்டும் மழை தீவிரமடையுமா?
வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 11-ம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நவம்பர் 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தின் நீட்டிக்கப்பட்ட கால முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலாக மாறுமா?
உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 15-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதன் நகர்வு மற்றும் தீவிரம் குறித்து அடுத்தடுத்த வானிலை அறிக்கைகளில் கூடுதல் விவரங்கள் வெளியாகும்.
இந்த வானிலை அமைப்பின் காரணமாக நவம்பர் 16-ம் தேதி தொடங்கும் வாரத்தில் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
