வங்கக்கடலில் நவ.13-ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி? தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெறுமா?
தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 13-ஆம் தேதி உருவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 15-ஆம் தேதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.வானிலை அமைப்பின் நகர்வு மற்றும் தீவிரத்தைப் பொறுத்து மழையின் அளவும் பகுதிகளும் மாறக்கூடும் என்பதால், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளைக் கவனிக்க வேண்டும்.
