தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை... வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரை அருகே வங்கக்கடலில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இதன் தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை மாற்றத்தை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வரும் அதிகாரிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். பருவமழை தீவிரமடைவதால் விவசாயப் பணிகள் மற்றும் நீர்நிலைகளின் நிலவரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
