அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்துச் சூறையாடிய கரடி...நள்ளிரவில் பரபரப்பு!

 
anganwadi

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாகக் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் உணவைத் தேடி ஊருக்குள் புகுந்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் கடைகளில் உள்ள முட்டைகளைச் சுவைத்து வருகின்றன. இதற்குப் பழகிப்போன கரடிகள் மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் செல்லாமல், கிராமங்களை ஒட்டிய புதர்ப் பகுதிகளில் பதுங்கி வாழ்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் கிராமப் பகுதிகளில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படும் அபாயகரமானச் சூழல் உருவாகியுள்ளது.

கரடி

இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள அதிகரட்டி கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய கரடி ஒன்று உணவு தேடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்குள் புகுந்துள்ளது. அங்குள்ள அங்கன்வாடி மையத்தின் கதவை உடைத்து உள்ளே சென்ற அந்தக் கரடி, அங்கிருந்த உணவுப் பொருட்களைக் கீழே கொட்டிச் சேதப்படுத்திச் சாப்பிட்டுள்ளது. மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் அங்கன்வாடி கதவு உடைக்கப்பட்டு உணவுப் பொருட்கள் சூறையாடப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் முகமிட்டு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அம்பையில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டது!

தினமும் தோட்டங்களில் உலா வந்த கரடி தற்போது அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்துள்ளதால் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவே அஞ்ச வேண்டியுள்ளதாகப் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் உலா வரும் கரடிகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.