குடியிருப்பு பகுதியில் பகலில் உலா வந்த கரடி... பொதுமக்கள் வீடுகளுக்குள் அடைக்கலம்!

 
கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கார்சலை குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் கரடி ஒன்று உலா வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள அடர்ந்த செடிகளுக்குள் இருந்து திடீரென வெளியே வந்த கரடியைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். உடனடியாக அனைவரும் தங்களது வீடுகளுக்குள் ஓடிச் சென்று கதவுகளைப் பூட்டிக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். சாலையில் நின்று நிதானமாகப் பேசிக் கொண்டிருந்தவர்களும் கரடியைப் பார்த்தவுடன் அருகிலிருந்த வீடுகளுக்குள் விரைந்து தஞ்சம் புகுந்தனர்.

கரடி

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த அந்த கரடி சிறிது நேரம் அங்கும் இங்கும் உலா வந்த பிறகு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. பகல் நேரத்தில் கரடி குடியிருப்பு பகுதியில் சுதந்திரமாக உலா வந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலிலேயே கரடி உலா வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பயத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

கரடி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்குள் தொடர்ந்து வனவிலங்குகள் புகுந்து வருகின்றன. குறிப்பாகக் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதுகாப்பும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்து இந்தக் கரடியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.