டாஸ்மாக் குவாட்டர் பாட்டிலில் வண்டு... மது அருந்தியவருக்கு வாந்தி, மயக்கம்!

 
மது பாட்டிலில் வண்டு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டு கிடந்ததும், அதனை அருந்திய நபர் மயக்கமடைந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளைப் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பேச்சிமுத்து (44), தனது நண்பர்களுடன் திருச்செந்தூர்-குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று 3 குவாட்டர் மதுபாட்டில்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு பாட்டிலில் இருந்த மதுவை பேச்சிமுத்து அருந்திய சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.

பாட்டில் டாஸ்மாக்

இதனால் சந்தேகமடைந்த அவர்கள், தாங்கள் வாங்கிய மற்றொரு மதுபாட்டிலைச் சோதித்துப் பார்த்தபோது, அதனுள் இறந்த நிலையில் வண்டுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தான் அருந்திய மதுபாட்டிலிலும் வண்டு இருந்திருக்கலாம் என்றும், அதனால்தான் தனக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

உடனே அவரது நண்பர்கள் பேச்சிமுத்துவை மீட்டுத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இச்சம்பவம் மதுப்பிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.