உயிருக்கே உலை வைக்கும் கொடூர விளையாட்டு... கண்களைக் கட்டிக்கொண்டு பெல்ட்டால் அடிக்கும் இளைஞர்கள்... பகீர் வீடியோ!
விளையாட்டு என்ற பெயரில் இளைஞர்கள் சிலர் கண்களைக் கட்டிக்கொண்டு பெல்ட்டால் மாறி மாறி அடித்துக் கொள்ளும் விபரீத வீடியோ இணையதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு அறையில் கூடி இருக்கும் இளைஞர்கள் குழுவாக அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக பெல்ட்டால் தாக்குகின்றனர். இதில் வலி தாங்க முடியாமல் இளைஞர்கள் அலறுவதும், மற்றவர்கள் அதை வேடிக்கை பார்ப்பதும் பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது. தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் இத்தகைய ஆபத்தான விளையாட்டுகள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Frustration Nikalo Game 😂 pic.twitter.com/jiLKlFu55r
— Vijay (@veejuparmar) April 23, 2026
கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடுவதால் பெல்ட் எதிர்பாராத விதமாக முகம் அல்லது கண்களில் பட்டால் நிரந்தரப் பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வெறும் பொழுதுபோக்கிற்காகத் தொடங்கி இறுதியில் இது பெரிய மோதலாகவோ அல்லது உடல் ரீதியான காயத்திலோ முடிவதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் மற்ற இளைஞர்களும் இதனைப் பின்பற்றி ஆபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த விபரீத விளையாட்டைப் பார்த்த இணையவாசிகள் பலரும், இது விளையாட்டா அல்லது ஒருவரை ஒருவர் சித்திரவதை செய்யும் செயலா என்று காட்டமாகப் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் செல்போனில் என்ன பார்க்கிறார்கள், யாரிடம் பழகுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும் எனப் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வன்முறையைத் தூண்டும் வகையிலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் இருக்கும் இதுபோன்ற வீடியோக்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விபரீத விளையாட்டு வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
