பெங்களூரு விமான நிலையத்தில் பிச்சை எடுத்த 2 பேர் ! 5 அடுக்கு பாதுகாப்பையும் மீறியது எப்படி?
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் பிச்சை எடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு அமலில் உள்ள நிலையில், அவர்கள் உள்ளே நுழைந்து பணம் கேட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் பயணிகளிடம் பிச்சை எடுத்த பிரதீக் பாட்டியா, வெங்கட தினேஷ் குமார் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்தனர். இவர்களில் ஒருவர் முன்பும் இதேபோன்ற செயலுக்காகப் பிடிபட்டு எச்சரிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மற்றொருவர் முகக்கவசம் அணிந்து, நேர்த்தியான உடையில் பயணியைப் போல நின்று பணம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு உள்ள நிலையில், இருவரும் எவ்வாறு உள்ளே நுழைந்தனர் என்பது குறித்து போலீசாரும் விமான நிலைய அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
