வெஜ் பிரியாணியில் சிக்கன் துண்டுகள்! பெங்களூரு விமான நிலைய உணவகத்தில் அதிர்ச்சி வீடியோ!

 
சிக்கன்

 

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் உள்ள உணவகத்தில், சைவ உணவு ஆர்டர் செய்த குடும்பத்தினருக்கு அசைவம் கலந்த உணவு வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.'டேஸ்ட் ஆஃப் இந்தியா' உணவகத்தில் அந்தக் குடும்பத்தினர் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால், வழங்கப்பட்ட உணவில் சிக்கன் துண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

முழுமையான சைவ உணவு மட்டுமே சாப்பிடும் தங்கள் குடும்பத்தினருக்கு இத்தகைய உணவு வழங்கப்பட்டது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தங்களது குழந்தைகளும் உணவு சைவம் என நினைத்து தெரியாமல் சாப்பிட்டுவிட்டதாகவும், இதனால் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பியூஷ் அகர்வால் என்பவர் அக்டோபர் 30-ஆம் தேதி சமூக வலைதளத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். உணவகத்தின் பில் ரசீதில் 'வெஜ் பிரியாணி' என்றே குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், உணவில் 3 அல்லது 4 சிறிய கோழித் துண்டுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், உணவகத்தின் சமையலர் மற்றும் மேலாளர் உணவில் கோழி இருந்ததை ஒப்புக்கொண்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் ஆகியவற்றிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நிர்வாகமும் உணவகமும் விசாரணை நடத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.