பெங்களூருவில் ஆட்டோ கட்டண தகராறு... 2 பெண்களுடன் நடுரோட்டில் மோதிய டிரைவர்! வைரல் வீடியோ

 
ஆட்டோ

 

பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் நடுரோட்டில் மோதலாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.கர்நாடக மாநிலம் பெங்களூருவின் HSR Layout 3-வது செக்டரில் செப்டம்பர் 28-ம் தேதி மதியம் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பெண்கள் ஆட்டோவில் பயணம் செய்த நிலையில், பயணம் முடிந்த பிறகு கட்டணம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநருக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு பெண்களும் ஆட்டோ ஓட்டுநரும் சாலையிலேயே ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மோதல் தீவிரமடைந்தபோது மற்றொரு பெண் தலையிட்டு அவர்களை விலக்கிவிட முயன்ற காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து HSR Layout போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் இரு பெண்களையும் தொடர்புகொண்டு புகார் அளிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டதாகவும், பின்னர் அவர்களில் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை காவலில் எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ஆட்டோ ஓட்டுநர் போலீசாரிடம் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். பெண்கள் ஆட்டோவை முன்பதிவு செய்து பலமுறை ரத்து செய்ததாகவும், பின்னர் மீண்டும் ஆட்டோவை முன்பதிவு செய்த நிலையில் கட்டணம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பெண்கள் தன்னை முதலில் தாக்கியதாகவும், அதற்கு பதிலளித்ததாகவும் ஓட்டுநர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணையில் உள்ள நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி இன்னும் தெளிவாகவில்லை.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.