உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச ஆண்களுக்கு வேலை இல்லை! பெங்களூரு CEO எடுத்த அதிரடி முடிவு
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் வேட்பாளர்களை தனது நிறுவனத்தில் இனி பணியமர்த்த மாட்டோம் என அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் குழந்தைகளுக்கான விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் A1 Sports World நிறுவனத்தின் நிறுவனர் Karthik SG என்கிற Karthik Shenoy, இதுதொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், நிறுவனத்துக்குள் நீண்ட ஆலோசனை மற்றும் விவாதத்துக்குப் பிறகு, வட இந்தியாவின் இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்த ஆண் வேட்பாளர்களை பணியமர்த்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Bengaluru entrepreneur Karthik SG, founder of A1 Sports World, said his company would not hire male candidates from Uttar Pradesh, Bihar, Rajasthan and Madhya Pradesh. He attributed the decision to an alleged incident involving a former employee accused of abusive behaviour… pic.twitter.com/0QfCPlmM86
— Mid Day (@mid_day) September 24, 2026
இந்த முடிவுக்கான காரணம் குறித்து மற்றொரு பதிவில் விளக்கம் அளித்த Karthik, சுமார் 2 வாரங்களுக்கு முன்பு இந்த மாநிலங்களில் ஒன்றைச் சேர்ந்த முன்னாள் ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். அந்த ஊழியருக்கு 2 முறை எச்சரிக்கை வழங்கப்பட்ட போதிலும், பெண் ஊழியர்களிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும், ஒரு பெண் ஊழியரிடம் வலுக்கட்டாயமாக நடந்து கொள்ள முயன்றதாகவும் Karthik குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தங்கள் நிறுவனத்தில் இளம் குழந்தைகளுடன் பணியாற்றுவதால் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். A1 Sports World நிறுவனத்தில் 32 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்களில் 14 பேர் பெண்கள் என்றும் Karthik கூறியுள்ளார்.
எனினும், ஒரு தனிநபர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து ஆண் வேட்பாளர்களையும் பணியமர்த்தாமல் இருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. சிலர் பணியாளர்களை தனித்தனியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மற்ற சிலர் நிறுவனத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை புரிந்து கொள்ள முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாக Karthik தொடர்ந்து பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வேலைவாய்ப்பு, பணியிடப் பாதுகாப்பு மற்றும் மாநில அடிப்படையிலான ஆட்சேர்ப்பு கொள்கை குறித்த விவாதமாக மாறியுள்ளது.
