வாடகை கேட்டதால் ஆத்திரம்? பெங்களூருவில் வீட்டு உரிமையாளர் சுட்டுக்கொலை!

 
பெங்களூரு

பெங்களூரு பட்டந்தூர் அக்ரஹாரப் பகுதியில் நிலுவையில் உள்ள வாடகைப் பணத்தைக் கேட்ட வீட்டு உரிமையாளரும் வழக்கறிஞருமான மஞ்சுநாத் (42), துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் வாடகைக்கு குடியிருந்த டெலிவரி ஊழியர்கள் இருவர் இந்தக் கொலையில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வாடகைப் பணத்தால் ஏற்பட்ட தகராறு

நிலுவையில் இருந்த வாடகையைச் செலுத்துமாறு மஞ்சுநாத் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இருவரும் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தப்பியோடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான இரு டெலிவரி ஊழியர்களையும் தேடி வருகின்றனர். வாடகைப் பணம் தொடர்பான தகராறே கொலைக்குக் காரணமா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.