பெங்களூருவில் சொகுசு கார் கடைக்குள் புகுந்து கொதிக்கும் எண்ணெய் சிதறி 3 பேர் படுகாயம்... அதிர்ச்சி வீடியோ!

 
பெங்களுரூ

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர்ப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று சாலையோர கபாப் கடைக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. இதில் கடையில் பணியாற்றிய 3 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.

பெங்களூருவின் பன்னர்கட்டா அருகே உள்ள ஹொம்மதேவனஹள்ளி பகுதியில் ‘ஹலேவூரம்மா கபாப் சென்டர்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 28-ம் தேதி மாலை, கடையில் சமையல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த சொகுசு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

முதலில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார், பின்னர் நேராகக் கடையின் சமையல் பகுதிக்குள் புகுந்தது. காரின் மோதலால் சமையல் பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் எண்ணெய் சிதறி, அங்கு பணியாற்றிய பசவராஜ், முனிகிருஷ்ணா, மங்கேஷ் ஆகிய 3 பேர் மீது பட்டது. இதில் அவர்கள் பலத்த தீக்காயமடைந்தனர்.

காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரைப் பறிமுதல் செய்துள்ள பன்னர்கட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.