பெங்களூருவில் அதிர்ச்சி... மனைவி உள்பட 7 பேரைக் கொன்றதாக கணவர் வாக்குமூலம்… !
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில், மனைவி உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொலை செய்ததாக கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலைகள் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜாஜிநகரைச் சேர்ந்த இந்துசேகர் (52) என்பவருக்கும் அவரது மனைவி சுனிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், சுனிதா, மாமியார் ரூபாவதி, மைத்துனர்கள் சிவக்குமார், சங்கர், அவர்களது மனைவிகள் திவ்யா, நளினி மற்றும் 7 வயது சிறுவன் புனீத் ஆகிய 7 பேரையும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் இந்தக் கொலைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆட்டுக்கல்லால் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும் இந்துசேகர், உடல்களை காரில் எடுத்துச் சென்று சிக்கபல்லாபூர் மாவட்டம் நந்தி மலை அடிவாரப் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் வீசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காணாமல் போன நளினியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்துசேகரின் தொடர்பு தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டார். இதுவரை 7 வயது சிறுவனின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
