பள்ளங்கள் இல்லாத நகரமாக மாறப்போகும் பெங்களூரு சாலைகள்… ரூ.4,800 கோடி 'Make Over'!
பெங்களூருவில் சாலைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைகளில் இருந்து உட்புற கிளை சாலைகள் வரை மேடு, பள்ளங்களால் நிரம்பி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலைக்கு தீர்வு என்ன என்ற கேள்வி எழுந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு முக்கிய அறிவிப்புடன் வந்துள்ளது.

அதன்படி, பெங்களூரு நகரின் சாலைகள் சீரமைப்பு, அகலப்படுத்தல் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறைப்புக்காக ரூ.4,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நகர்ப்புற மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார். 1,682 கிலோமீட்டர் நீள சாலைகளில் ஏற்கனவே 124 கிலோமீட்டர் வரை ஒயிட் டாப்பிங் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 157 கிலோமீட்டர் சாலைகளுக்கு ரூ.1,700 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 392 கிலோமீட்டர் சாலைகளுக்கு தார் போட ரூ.694 கோடி செலவிடப்படுகிறது.

இதையடுத்து ரூ.1,241 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளும், முதல்வர் நிதியிலிருந்து ரூ.900 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22,539 பள்ளங்கள் சரி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐடி–பிடி வழித்தடங்களில் அதிக போக்குவரத்து உள்ள சாலைகளுக்கு ரூ.273 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க 126.4 கிலோமீட்டர் தூரத்திற்கு 13 மேம்பாலங்கள் ரூ.18,204 கோடி செலவில் கட்டப்பட்டு வருவதால், இனிவரும் காலங்களில் பெங்களூரு சாலைகள் பள்ளங்கள் இல்லாத நகரமாக மாறும் என அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.
