பெங்களூரில் அதிர்ச்சி... பள்ளி அருகே அடுத்தடுத்து வெடித்த 4 கியாஸ் சிலிண்டர்கள்!
பெங்களூருவில் தனியார் பள்ளிக்கூடம் அருகே அடுத்தடுத்து 4 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.பெங்களூரு பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கக்கதாசபுரா 6-வது கிராஸ் பகுதியில் உள்ள காலி இடத்தில் தகர கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நேற்று மதியம் திடீரென பலத்த சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டதுடன், தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பையப்பனஹள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த இடம் மூர்த்தி என்பவருக்கு சொந்தமானது என்பதும், அங்கு சட்டவிரோதமாக சமையல் கியாஸ் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. கியாஸ் நிரப்பும் பணியின்போது ஏற்பட்ட தீ காரணமாக சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 4 சிலிண்டர்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. சிலிண்டர்கள் வெடித்ததில் அவற்றின் உதிரிபாகங்கள் அருகில் இருந்த தனியார் பள்ளிக்கூடத்தின் நுழைவாயில் பகுதியில் விழுந்தன.அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் அந்த பகுதியில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
சம்பவ இடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், நிலத்தின் உரிமையாளர் மூர்த்தி மற்றும் சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இதுதொடர்பாக பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
