காரமான நூடுல்ஸ் ... உணவக உரிமையாளர் வாயில் திணித்து வன்முறை செய்த கும்பல்!
பெங்களூருவில் நூடுல்ஸ் அதிக காரமாக இருப்பதாகக் கூறி ஏற்பட்ட தகராறு, வன்முறையாக மாறியுள்ளது. உணவகத்தில் பணியாற்றிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியையும், அவர்களுக்கு உதவ வந்த மற்றொருவரையும் குடிபோதையில் இருந்த கும்பல் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்ட தோகூர் பகுதியில் தீபக் தாபா என்பவர் துரித உணவுக் கடை நடத்தி வருகிறார். அங்கு இரவு உணவு சாப்பிட வந்த 4 பேர் நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளனர். உணவு வழங்கப்பட்டதும், அதில் காரம் அதிகமாக இருப்பதாகக் கூறி தீபக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு முற்றிய நிலையில், தீபக்கை அடித்தும் உதைத்தும் தாக்கியதுடன், அவரது வாயில் நூடுல்ஸைத் திணிக்கவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அவரது மனைவி மற்றும் அங்கிருந்த மற்றொருவர் தடுக்க முயன்றபோது அவர்களும் தாக்கப்பட்டனர். இதில் மூவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எலக்ட்ரானிக் சிட்டி போலீசார், கர்நாடகாவின் கொள்ளேகாலைச் சேர்ந்த நாகராஜ், சந்துரு, தேவராஜ் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
