திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற காதலன்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது ஐஸ்வர்யா, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது சந்தோஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஐஸ்வர்யா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், திருமணத்தில் விருப்பமில்லாத சந்தோஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஏதாவது காரணம் கூறித் தள்ளிப்போட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஐஸ்வர்யா, திருமணம் குறித்து நேரில் பேசி முடிவெடுக்க பெங்களூரு அபிகெரே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வருமாறு சந்தோஷை அழைத்துள்ளார்.
விடுதி அறையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த சந்தோஷ் ஐஸ்வர்யாவை 3-வது மாடி ஜன்னல் வழியாகக் கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்து மின்கம்பத்தில் மோதிப் படுகாயமடைந்த ஐஸ்வர்யா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதலில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் சந்தோஷ் தான் அவரைத் தள்ளிவிட்டு கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், தலைமறைவாக இருந்த சந்தோஷைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
