சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலத்தில் மிரட்டும் மேம்பால ஓட்டை... வாகன ஓட்டிகள் அச்சம்!
சென்னை - பெங்களூரு இடையே தேசிய நெடுஞ்சாலையின் புதிய மேம்பாலத்தில் திடீரென ஓட்டை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து பெங்களூரூ மார்க்கமாக செல்லும் இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இங்கு நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்சாலையை கடக்கும்போது விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது சாலையையும் மேம்பாலத்தையும் இணைக்கும் மேற்பகுதியில் விரிசல் ஏற்பட்டு பெரிய அளவில் பள்ளம் தோன்றி உள்ளது. இதேபோல் மேலும் இருவேறு இடங்களிலும் எதிர்பாராத விதமாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாலத்தில் அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால் பாலம் பலம் இழந்து இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் பள்ளம் இருப்பதை கண்டறிய முடியாமல் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
