பனிப்பொழிவால் வெற்றிலை அறுவடை பாதிப்பு... ஒரு கட்டு ரூ.2,800-க்கு விற்பனை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் பனிப்பொழிவு காரணமாக வெற்றிலை அறுவடை பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் விற்பனை மந்தமாகியுள்ளது. வரத்து குறைவால் நேற்று சந்தையில் வெற்றிலை விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

பனிப்பொழிவு அதிகரிப்பு காரணமாக வெற்றிலை அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாகத் திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொள்ளாச்சி சந்தைக்கு வெற்றிலை கொண்டு வரப்படும் நிலையில், அப்பகுதிகளில் நிலவும் மோசமான வானிலையால் வரத்து கணிசமாகச் சரிந்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதால் சந்தையில் வியாபாரமும் மந்தமாக நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் வரை 6,000 வெற்றிலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.3,800 வரை விற்பனையான நிலையில், நேற்று சந்தையில் வரத்து குறைவால் விலை மாறுபட்டு ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை மட்டுமே ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு கட்டு ரூ.2,800-க்கு விற்பனையானது.
