உஷார்... ரீல்ஸ் எடுத்தபோது கால்வாயில் தவறி விழுந்து 3 இளைஞர்கள் பலி!

 
ரீல்ஸ்

தெலுங்கானா மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ படமாக்கியபோது, எதிர்பாராதவிதமாக நீர்நிலைக் கால்வாயில் தவறி விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், முப்பால் பகுதியில் அமைந்துள்ள 'ஸ்ரீராம் சாகர்' அணையின் லட்சுமி பாசனக் கால்வாய் பகுதியில் இச்சம்பவம் நேரிட்டுள்ளது.

நிஜாமாபாத் ஆட்டோ நகரைச் சேர்ந்த ஷேக் கலீம் (24), நஜாவத் (24), மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பர்ஹான் (17) மற்றும் அகீம் (17) ஆகிய 4 பேரும் கால்வாயில் குளித்தவாறே செல்போனில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரெனக் கால் வழுக்கி ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில், நீரோட்டம் அதிகமாக இருந்ததால் 4 பேரும் அணைக்கட்டுக் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இன்ஸ்டா

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஷேக் கலீம், நஜாவத் மற்றும் பர்ஹான் ஆகிய மூவரின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீரில் மூழ்கி மாயமான மற்றொரு சிறுவனான அகீமைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமூக வலைத்தள மோகத்தால் இளைஞர்கள் உயிரை விட்ட இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.