உஷார்... நாடு முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் இயங்காது... ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி!
வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்டுள்ள தொடர் வேலைநிறுத்தம் மற்றும் வார இறுதி விடுமுறைகள் காரணமாக, நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வருகின்ற செப்டம்பர் 26 (சனி) மற்றும் செப்டம்பர் 27 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் வழக்கமான வார இறுதி விடுமுறை வருகிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காத சூழல் உருவாகியுள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை (அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவித்தல்), ஓய்வூதிய பலன்களைப் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை எதிர்த்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்காததால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த 5 நாள் தொடர் விடுமுறை மற்றும் வேலைநிறுத்தத்தால் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை, கடன் தொடர்பான பணிகள் போன்ற வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும். இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படக்கூடும்.

ஏடிஎம் மற்றும் இணையவழி வங்கிச் சேவைகள் வழக்கம்போல இயங்கும் என்றாலும், சில வங்கி சார்ந்த பணிகள் தாமதமாகலாம். நாடு முழுவதும் சுமார் 85,000 வங்கி கிளைகள் இதில் பங்கேற்க உள்ளதால், முக்கியமான காசோலைகள் மற்றும் பணப் பரிமாற்றங்களை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு எஸ்பிஐ, யூனியன் பேங்க் உள்ளிட்ட முக்கிய வங்கிகள் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
