உஷார்.. லைசென்ஸ் இன்றி பைக் ஓட்ட அனுமதி - சிறுவனின் தந்தை கைது!

 
லைசென்ஸ்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வாகன சோதனையின் போது பைக் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் படுகாயமடைந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவன் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில், கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்புச் சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் படுகாயமடைந்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் மற்றும் போக்குவரத்து போலீசார் இன்று மதியம் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கீழ்ப்பாக்கம் சாலை சந்திப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வாகனங்களை மறித்துச் சோதனையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்த அவர் முயன்றார். ஆனால், அந்த பைக்கை ஓட்டி வந்த சிறுவன் வாகனத்தை நிறுத்தாமல், கட்டுப்பாட்டை இழந்து எஸ்.ஐ மீது பலமாக மோதினான்.

விபத்து

இந்த மோதலில் எஸ்.ஐ முத்துகிருஷ்ணன் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த சக போலீசார் அவரை மீட்டு, உடனடியாகச் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தியதில், அவனுக்குப் போதிய வயது ஆகவில்லை என்பதும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி மைனர் சிறுவன் மீது விபத்து ஏற்படுத்தியதற்குக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தைக் கொடுத்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பைக்கை ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக, அச்சிறுவனின் தந்தை சந்தீப்குமாரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாத தங்களது பிள்ளைகளிடம் பெற்றோர் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களைக் கொடுத்து அனுப்பக் கூடாது என்றும், விதிக மீறினால் பெற்றோரே அதற்கு முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் சென்னை போக்குவரத்து போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.