உஷார்... சிலிண்டர் மானியம் ரத்து... ஜூன் 30 கடைசி தேதி.. உடனே இதைப் பண்ணுங்க!

 
சிலிண்டர் மானியம் சிலிண்டர் மானியம்

மத்திய அரசின் நேரடி மானியப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத் தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கே.வொய்.சி (e-KYC) நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக் காலக்கெடு நெருங்கி வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவசர அறிவுறுத்தலை விடுத்துள்ளன.

மத்திய எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இண்டேன், பாரத் மற்றும் ஹெச்பி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் சமையல் எரிவாயு நுகர்வோர் அனைவரும் இந்த கே.வொய்.சி. சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். வரும் ஜூன் 30, 2026-க்குள் இந்தச் சரிபார்ப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என குறிக்கப்பட்டுள்ளன.

சிலிண்டர்

குறிப்பிட்ட இந்தத் தேதிக்குள் சரிபார்ப்பைச் செய்யத் தவறினால், வங்கிக் கணக்குகளில் வழக்கமாக நேரடியாக டெபாசிட் செய்யப்படும் மானியத் தொகை தற்காலிகமாக நிறுத்தப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது இல்லங்களில் இருந்தபடியோ அல்லது நேரில் சென்றோ இந்தச் சரிபார்ப்பை எளிய முறையில் செய்து கொள்ளலாம்: அந்தந்த எரிவாயு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கைபேசி செயலிகளைப் (உதாரணமாக, IndianOil One, Hello BPCL, myHPgas) பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் உள்நுழைந்து, முக அடையாள அங்கீகாரம் அல்லது செல்போனுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் மூலம் வீட்டில் இருந்தபடியே கணினி வழியில் சரிபார்ப்பை எளிதாக முடிக்கலாம்.

ஆன்லைன் வசதி இல்லாத பொதுமக்கள், தங்களது பகுதிக்குட்பட்ட எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் செல்லலாம். அங்குள்ள பயோமெட்ரிக் கருவிகள் மூலம் கைரேகை அல்லது கண் விழித் திரை அங்கீகாரத்தை வழங்கி, தங்களது கணக்கை உடனடியாகச் சரிசெய்து கொள்ளலாம்.

கேஸ் சிலிண்டர்

இந்தச் சரிபார்ப்பை மேற்கொள்ளச் செல்லும்போது வாடிக்கையாளர்கள் தங்களது சமையல் எரிவாயு இணைப்புப் புத்தகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

போலி எரிவாயு இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கவும், தகுதியான பயனாளிகளுக்கு மானியம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே இ-KYC சரிபார்ப்பை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.