உஷார்... இனி அனுமதியின்றி மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

 
மரம் வெட்டினால்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள், தனிநபர் வளாகங்களில் உள்ள மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக மரங்கள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கும் மாநகராட்சியின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 12 லட்சம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. பல இடங்களில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதாக வந்த புகார்களை அடுத்து மாநகராட்சி மரக் குழு புதிய அபராத விதிகளை அமல்படுத்தியுள்ளது.

அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1,00,000 வரை அபராதம் என்றும், அனுமதியின்றி கிளைகளை வெட்டினால்  ரூ.15,000 வரை அபராதமும், விளம்பரங்களுக்காக மரங்களில் ஆணி அடிப்பது / மின்விளக்கு சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் ரூ.15,000 வரை அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மரம் வெட்டினால்

மரங்களை அகற்ற அனுமதி பெறும் முறை

மாநகராட்சி நிர்வாகம் மரம் தொடர்பான அனைத்து அனுமதிகளையும் இணையவழி முறைக்கு மாற்றியுள்ளது. மரங்களை வெட்டவோ அல்லது கிளைகளை அகற்றுவோ பொதுமக்கள் Greater Chennai Corporation Portal அல்லது 'நம்ம சென்னை' செயலி மூலம் மட்டுமே ஆன்லைனில் முன்அனுமதி பெற வேண்டும்.

பொது இடங்கள் மட்டுமின்றி, தனிநபர் மனைகள் மற்றும் தனியார் நிறுவன வளாகங்களில் உள்ள மரங்களுக்கும் மாநகராட்சியின் மரக் குழுவிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகும். பொது இடங்களில் உள்ள மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டால், பொதுமக்கள் 1913 என்ற மாநகராட்சி உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மரம் வெட்டினால்

மழை அல்லது புயல் காலங்களில் அபாயகரமாக இருக்கும் மரங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள கிளைகளை மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகளே அகற்றுவார்கள்; பொதுமக்கள் நேரடியாகச் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.