உஷார்... காதில் ப்ளூடூத் வெடித்து கல்லூரி மாணவி படுகாயம்... இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
உஷார் மக்களே... உள்ளங்கைக்குள் உலகம் என்று சுருங்கி விட்ட நிலையில், ப்ளுடூத், ஹெட்போன், டிஜிட்டல் வாட்ச் என்று பாதி தூக்கத்தில் கூட எழுந்து செல்போன் பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கு. இதில், விலை உயர்வு, விலை கம்மி என்றெல்லாம் கிடையாது. விலை உயர்ந்த, பிராண்டட் எலக்ட்ரானிக் சாதனங்கள் கூட சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதற்கு உதாரணமாக, ராஜஸ்தானில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. மாணவி ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருந்த ப்ளூடூத் இயர்போன் காதிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவி ஒருவருக்கு, அவரது சகோதரி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஜேபிஎல் நிறுவனத்தின் ப்ளூடூத் இயர்போனை பரிசாக வழங்கியுள்ளார். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.5,499 ஆகும். சம்பவத்தன்று மாணவி அந்த இயர்போனை காதில் மாட்டிப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, அது எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் மாணவியின் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

தனக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவத்தை அந்த மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். அதில், வெடித்துச் சிதறிய இயர்போனின் பாகங்கள் மற்றும் காயமடைந்த தனது காதுப் பகுதியை அவர் காட்டியுள்ளார். "விலை உயர்ந்த பிராண்டட் சாதனத்திற்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் பாதுகாப்பு என்னாவது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகின்றன.
இந்தச் சர்ச்சை குறித்து ஜேபிஎல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. மாணவியின் பதிவிற்குப் பதிலளித்துள்ள அந்நிறுவனம், "இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் வருந்துகிறோம். இது தொடர்பான விபரங்களை இந்தியாவில் உள்ள எங்களது தொழில்நுட்பக் குழுவினருக்குத் தெரிவித்துள்ளோம். உரிய விசாரணை நடத்தப்படும்,"
எனத் தெரிவித்துள்ளது.

பொதுவாக ப்ளூடூத் சாதனங்களில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகள் அதிக வெப்பமடைவதாலோ அல்லது தயாரிப்புக் குறைபாடுகளாலோ வெடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தரம் குறைந்த சார்ஜர்களைப் பயன்படுத்தக் கூடாது. சாதனம் அதிக வெப்பமடைவது தெரிந்தால் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். காதில் அணியும் சாதனங்கள் என்பதால், இத்தகைய விபத்துகள் பார்வைக் குறைபாடு அல்லது கேட்கும் திறன் பாதிப்பு போன்ற நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
