உஷார்... தனியார் தீம் பார்க்கில் ராட்சத ராட்டினத்தில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி படுகாயம்!
சென்னையில் உள்ள புகழ்பெற்ற தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் சுற்றியபோது ஏற்பட்ட விபத்தில், கல்லூரி மாணவி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவிற்குச் சுற்றுலா சென்ற ராயபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜப்ரீன் பாத்திமா, அங்குள்ள 'ராக் அண்டு ரோல்' ராட்டினத்தில் விளையாடச் சென்றுள்ளார். மாணவி ராட்டினத்தில் அமர்ந்து தனது பாதுகாப்புக்கான 'சீட் பெல்ட்' அணிவதற்கு முன்பாகவே, அங்குள்ள ஊழியர்கள் கவனக்குறைவாக ராட்டினத்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

ராட்டினம் வேகமாகச் சுற்றத் தொடங்கியதால், நிலைதடுமாறிய ஜப்ரீன் பாத்திமா ராட்டினத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். பலத்த காயமடைந்த மாணவி உடனடியாக மீட்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார், பொழுதுபோக்கு பூங்காவிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல், அஜாக்கிரதையாக ராட்டினத்தை இயக்கி விபத்துக்குக் காரணமாக இருந்ததாகப் பூங்கா ஊழியர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பொழுதுபோக்கு பூங்காக்களில் இது போன்ற இயந்திர விளையாட்டுகளில் ஈடுபடும்போது, ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
