உஷார்... ஆழம் தெரியாமல் காரை செலுத்தியதால் ரயில்வே தரைப்பால மழைநீரில் கார் மூழ்கி தம்பதி பலி!

 
கார் மழைநீர் தரைப்பாலம் மூழ்கி கார் மழைநீர் தரைப்பாலம் மூழ்கி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரின் ஆழம் தெரியாமல் காரைச் செலுத்தியதால், தண்ணீரில் கார் முற்றிலும் மூழ்கி தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கோடை மழை பரவலாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஓமலூர் அருகே உள்ள ஒரு முக்கிய ரயில்வே தரைப்பாலத்தில் வழக்கம்போலப் பெருமளவில் மழைநீர் தேங்கியிருந்தது. முறையான வடிகால் வசதி இல்லாததால், அந்தப் பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது.

கார் மழைநீர் தரைப்பாலம் மூழ்கி

ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாஜலம் மற்றும் அவரது மனைவி ராதா ஆகிய இருவரும் தங்களின் காரில் அந்தச் சாலை வழியாக வந்துள்ளனர். அப்போது தரைப்பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரின் அளவையும், அதன் ஆபத்தான ஆழத்தையும் சரியாகக் கணிக்க முடியாத வெங்கடாஜலம், காரை முன்னோக்கிச் செலுத்தியுள்ளார்.

தரைப்பாலத்தின் நடுவே சென்றபோது கார் எதிர்பாராத விதமாகப் பெருமளவு தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியது. என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்து கார் ஆஃப் ஆனதால், கதவுகளைத் திறக்க முடியாமல் இருவரும் காரின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். கார் தண்ணீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக அவர்களை மீட்கப் போராடினர். மேலும் இதுகுறித்து தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கார் மழைநீர் தரைப்பாலம் மூழ்கி

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காரை மீட்ட போதும், அதற்குள் வெங்கடாஜலம் மற்றும் அவரது மனைவி ராதா ஆகிய இருவரும் காரின் உள்ளே தேங்கிய தண்ணீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மழைக்காலங்களில் தரைப்பாலங்களில் தேங்கும் தண்ணீரின் ஆபத்தை உணராமல் வாகனங்களைச் செலுத்துவது இத்தகைய பேராபத்துகளை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சோகச் சம்பவம் மற்றுமொரு சான்றாக மாறியுள்ளது. விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.