உஷார்... மாமியார் இறுதிச்சடங்கிற்காக ஆற்றில் இறங்கிய மருமகனை முதலை கவ்விச் சென்ற கொடூரம்!
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், மாமியாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக வந்த மருமகன் ஒருவரை, ஆற்றில் கை கழுவியபோது முதலை கவ்விச் சென்று கொன்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர், தனது மாமியாரின் மறைவுச் செய்தி கேட்டு அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். இறுதிச்சடங்கு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அங்குள்ள புனிதமான சரயு நதிக்கரைக்கு உறவினர்களுடன் அவர் சென்றிருந்தார்.

அங்குச் சடங்குகள் முடிந்த பின், தீபக் நதிக்கரையின் ஓரமாக நின்று தனது கைகளைக் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றுத் தண்ணீருக்குள் மறைந்திருந்த ராட்சத முதலை ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் தீபக்கைத் தாக்கித் தனது பலத்த தாடைகளால் கவ்விப் பிடித்தது.
முதலை தாக்கியவுடன் அதிர்ச்சியடைந்த தீபக் காப்பாற்றக் கோரி கூச்சலிட்டார். கரையில் நின்றிருந்த உறவினர்களும், பொதுமக்களும் சத்தம் கேட்டு ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் அந்த முதலை தீபக்கை ஆழமான தண்ணீருக்குள் அதிவேகமாக இழுத்துச் சென்று மறைந்தது. அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல், ஆற்றின் கரையில் நின்று கொண்டு தங்களின் கண்முன்னே நடந்த இந்த விபரீதத்தைக் கண்டு அச்சத்தில் உறைந்து போயினர்.

இச்சம்பவம் குறித்துப் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள், படகுகள் மூலம் சரயு ஆற்றில் இறங்கித் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், ஆறு மிகவும் ஆழமாக இருப்பதாலும், நீரோட்டம் அதிகமாக இருப்பதாலும் முதலை கவ்விச் சென்ற தீபக் குறித்த எந்தவொரு தடயமும், அவரது உடலும் இதுவரை கண்டறியப்படவில்லை. மாமியாரின் இறுதிச்சடங்கிற்கு வந்த இடத்தில் மருமகனும் முதலையிடம் சிக்கிப் பலியான சம்பவம் அந்த குடும்பத்தினரிடையேயும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. நதிக்கரைக்குச் செல்லும் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
