உஷார்... பேப்பர் கப்பில் டீ குடிக்கிறீங்களா? - 75,000 பிளாஸ்டிக் துகள்கள் உள்ளே - மருத்துவர்கள் எச்சரிக்கை!
பிளாஸ்டிக் கப்களுக்கு மாற்றாக நாம் பயன்படுத்தத் தொடங்கிய பேப்பர் கப்கள், உண்மையில் பிளாஸ்டிக்கை விட ஆபத்தானவை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பேப்பர் கப்கள் நனையாமல் இருப்பதற்காக அதன் உட்புறத்தில் மிக மெல்லிய மெழுகு மற்றும் பாலிஎத்திலீன் பிளாஸ்டிக் படலம் பூசப்பட்டிருக்கும். இந்த கப்களில் 85°C முதல் 90°C வெப்பநிலையுள்ள சூடான டீ அல்லது காபியை ஊற்றும்போது, அந்த வெப்பத்தினால் உட்புறம் உள்ள பிளாஸ்டிக் படலம் கரைந்து பானத்துடன் கலந்துவிடுகிறது.

ஒரு நபர் ஒரு நாளைக்கு மூன்று முறை பேப்பர் கப்பில் சூடான பானங்களைக் குடித்தால், அவர் சுமார் 75,000 நுண் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் ரத்தத்தில் கலந்து உடலின் முக்கிய உறுப்புகளில் படிந்துவிடுகின்றன. நீண்ட கால அடிப்படையில் இவை செரிமானப் கோளாறுகள், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் இனப்பெருக்க மண்டலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
பேப்பர் கப்களில் பயன்படுத்தப்படும் புளோரின் போன்ற வேதிப்பொருட்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கும் வழிவகுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கச் சில எளிய மாற்றங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

டீ கடைகளுக்குச் செல்லும்போது கைவசம் சிறிய எஃகு டம்ளர் வைத்திருப்பது சிறந்தது. அலுவலகங்களில் பீங்கான் அல்லது கண்ணாடி கோப்பைகளைப் பயன்படுத்தலாம். பாரம்பரியமான மண் குவளைகளில் டீ குடிப்பது ஆரோக்கியமானது மற்றும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது.
