உஷார்... குழந்தைகளுக்கு போன் கொடுக்கறீங்களா? - மூளை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை - எய்ம்ஸ் எச்சரிக்கை!

 
குழந்தை செல்போன் குழந்தை செல்போன்

ஸ்மார்ட்போன் என்ற மாய உலகிற்குள் ஒரு வயது குழந்தைகளை அனுமதிப்பது, அவர்களின் எதிர்காலத்தை இருளாக்கிவிடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எய்ம்ஸ் நடத்திய ஆய்வில், ஒரு வயது அல்லது அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகள் அதிக நேரம் திரையை (Screen Time) பார்ப்பது, அவர்களிடையே ஆட்டிசம் (Autism) போன்ற நடத்தை மாற்றங்கள் ஏற்பட 60 சதவீதம் கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 3 வயதிற்குள்ளேயே குழந்தைகளுக்குப் பேச்சுத் திறன் குறைதல், மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பதில் சிரமம் மற்றும் உணர்வு ரீதியான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

செல்போன்

குழந்தைகளின் மூளை வளர்ச்சி என்பது ஆரம்ப காலங்களில் மிக வேகமாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் நிஜ உலக மனிதர்களுடனும், விளையாட்டுப் பொருட்களுடனும் தொடர்பில் இருக்க வேண்டும். மாறாக, செல்போன் திரையைப் பார்ப்பதால் திரையில் மின்னும் ஒளி மற்றும் வேகமான மாற்றங்கள் குழந்தையின் மூளையை மழுங்கச் செய்து, நிதானமாகக் கற்றுக் கொள்ளும் திறனைப் பாதிக்கிறது. மற்றவர்களுடன் கண் பார்த்து பேசுவது மற்றும் புன்னகைப்பது போன்ற அடிப்படை சமூகப் பண்புகளைக் குழந்தைகள் இழக்க நேரிடுகிறது.

செல்போன்

குழந்தைகளுக்கு உணவூட்டும் போதோ அல்லது அவர்கள் அழுதாலோ சமாதானம் செய்யச் செல்போன்களைக் கொடுப்பது ஒரு 'டிஜிட்டல் போதை'யாக மாறிவிடுகிறது. குழந்தைகளுக்குத் தேவை செல்போன் செயலிகள் அல்ல; பெற்றோரின் நேரடியான அரவணைப்பு, அவர்களுடன் பேசி விளையாடுவது மற்றும் கதை சொல்வது மட்டுமே அவர்களின் மூளை வளர்ச்சியைத் தூண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

2 வயது வரை குழந்தைகளுக்குத் திரை நேரத்தைத் (Mobile/TV) தவிர்க்க வேண்டும். குழந்தைகள் விளையாடுவதற்குப் பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வண்ணப் புத்தகங்களை வழங்கலாம். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது குழந்தைகளுடன் நேரடியாகப் பேசி பழக வேண்டும்.