உஷார்... மறந்துடாதீங்க... ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பயணிகள் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ரயில்களிலோ அல்லது ரயில் நிலைய வளாகங்களிலோ பட்டாசுகள், கேஸ் சிலிண்டர்கள், பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் ஆபத்தான பொருட்களைப் பயணிகள் எடுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி யாரேனும் பட்டாசுகளைக் கொண்டு செல்கிறார்களா என்பதைப் பரிசோதிக்க முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தடையை மீறி ரயிலில் பட்டாசுகள் அல்லது ஆபத்தான பொருட்களைக் கொண்டு சென்றால், ரயில்வே சட்டம் பிரிவு 164-ன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில் பயணத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பயணிகள் அனைவரும் ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
