உஷார்... நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது... .வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

 
வாட்ஸ் அப் வெப்

இந்தியாவில் வாட்ஸ்அப் வெப் மற்றும் இதர தகவல் தொடர்பு செயலிகளைப் பயன்படுத்துவதில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள இந்த புதிய 'சிம் பைண்டிங்' விதிகள் குறித்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் கணினி அல்லது லேப்டாப்பில் நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் வெப் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக்-அவுட் செய்யப்படும். பயனர் மீண்டும் லாக்-இன் செய்ய வேண்டுமெனில், தனது முதன்மை மொபைல் போன் மூலம் QR கோடை ஸ்கேன் செய்து மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

வாட்ஸ் அப்

ஒருமுறை லாக்-இன் செய்துவிட்டு, மொபைல் போன் அருகில் இல்லாத நிலையிலும் நீண்ட நாட்கள் கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஹேக்கர்கள் கணினியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, வாட்ஸ்அப் எந்த எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த சிம் கார்டு அந்த மொபைல் போனில் கட்டாயம் இருக்க வேண்டும்.

தற்போது ஒருமுறை ஓடிபி மூலம் வாட்ஸ்அப் ஆக்டிவேட் செய்த பிறகு, சிம் கார்டை கழற்றி வைத்தாலும் வாட்ஸ்அப் செயல்படும். ஆனால் இனிமேல், சிம் கார்டு மொபைலில் இருந்து அகற்றப்பட்டாலோ அல்லது அந்த எண் செயலிழந்தாலோ வாட்ஸ்அப் சேவை உடனடியாகத் துண்டிக்கப்படும். வாட்ஸ்அப் செயலி அவ்வப்போது (தோராயமாக 6 மணி நேரத்திற்கு ஒருமுறை) அந்த சிம் கார்டு போனில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கும்.

வாட்ஸ் அப்

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்திய எண்களைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் நடத்தப்படும் சைபர் மோசடிகளைக் குறைக்க இந்த 'சிம் பைண்டிங்' முறை உதவும் என அரசு கருதுகிறது.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இது குறித்துக் கூறுகையில், "தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. இந்த விதிகள் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதிகரித்து வரும் பண மோசடிகளைத் தடுக்கவும் அவசியம். இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான பிப்ரவரி 28 கால அவகாசம் நீட்டிக்கப்படாது," என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பயனர்களுக்கான குறிப்பு: மார்ச் 1 முதல் உங்கள் வாட்ஸ்அப் வெப் அடிக்கடி லாக்-அவுட் ஆனால், அது தொழில்நுட்பக் கோளாறு அல்ல; அரசின் புதிய பாதுகாப்பு விதிகளின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.